திரு அட்டபுயக்கரம்
தோலாத வென்றியான் அட்டபுயகரத்தான்
அருளியவர் : பேயாழ்வார்
பாசுர எண் : 2380
திவ்ய தேசம் : திரு அட்டபுயக்கரம்
மூன்றாம் திருவந்தாதி : 99
தொட்ட படையெட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்தெறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு.
(மூன்றாம் திருவந்தாதி - 99)
தொட்ட படை எட்டும் தோலாத வென்றியான்
அட்ட புயகரத்தான் அஞ்ஞான்று குட்டத்துக்
கோள் முதலை துஞ்சக் குறித்து எறிந்த சக்கரத்தான்
தாள் முதலே நங்கட்குச் சார்வு.
(மூன்றாம் திருவந்தாதி - 99)
thotta padaiyettum thOlaadha vendriyaan
atta buyakaraththaan anjnaandru kuttaththu
kOL mudhalai thunja kuRitherindha sakkaraththaan
thaaL mudhale nangatku chaarvu.
(moondraam thiruvandhaadhi - 99)
முன்னொரு நாள், தாமரை மலர்ப் பொய்கையில், வலியதோர் முதலையிடம் அகப்பட்ட தன் பக்தனான கஜேந்திரனைக் காக்க தன் சுதர்சன சக்கரத்தை எறிந்த திருமால், "அட்டபுயகரத்தான்" என்ற பெயரில் அட்டபுயக்கரம் என்னும் திவ்ய தேசத்தில் எழுந்தருளியிருக்கிறான். தன்னை அண்டியவரைக் காக்க எட்டுக் கரங்களிலும் ஆயுதம் தரித்திருக்கும் கோலத்தில் அவன் இங்கு காட்சியளிக்கிறான். அவன் விடுக்கும் ஆயுதங்கள் எவையும் என்றும் தோல்வியை அடைந்ததே இல்லை. என்றும் வெற்றியை உடைய அந்தத் திருமாலின் பாதங்களே நமக்கு அடைக்கலம்.
படை - ஆயுதம்
தோலாத - தோல்வி அடையாத
அட்டம் - எட்டு (அஷ்டம் => அட்டம்)
புயம் - தோள் (அஷ்டபுஜம் => அட்டபுயம்)
ஞான்று - காலம்
அஞ்ஞான்று - அன்றொரு காலம்
குட்டம் - குளம்
கோள் - வலிமை
நங்கட்கு - நமக்கு
வென்றியான் - வெற்றியை உடையவன்
தாள்முதல் - (திருமால்) பாதம்
துஞ்சுதல் - வலிமை அழிதல்; தூங்குதல்; இறத்தல்
சார்வு - அடைக்கலம்
அட்டபுயக்கரம் - 108 திவ்ய தேசங்களுள் எட்டுக் கரங்களுடன் பெருமாள் எழுந்தருளியிருப்பது இந்த ஒரு திவ்ய தேசத்தில் மட்டுமே.
"செம்பொன் இலங்கு வலங்கை வாளி
திண்சிலை தண்டொடு சங்க மொண்வாள்
உம்ப ரிருசுடராழியோடு
கேடக மொண்மலர்பற்றி யெற்றே"
(பெரிய திருமொழி 2.8.3)
வலப்புறம் உள்ள நான்கு கரங்களில் சக்கரம், வாள், மலர், அம்பு ஆகியவற்றையும், இடப்புறம் உள்ள நான்கு கரங்களில் சங்கு, வில், கேடயம், தண்டாயுதம் ஆகியவற்றையும் தரித்துக் கொண்டு காட்சி அளிக்கிறார்.
With eight hands wielding eight victorious weapons that have never seen defeat, the Lord of Attabuyakaram is our sole refuge. He wielded his discus over a crocodile and saved an elephant in the yore.
