ஆழ்வார்கள்


ஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள் அட்டவணை.
| எண் | ஆழ்வார் | அம்சம் | அவதார ஸ்தலம் |
| 1 | பொய்கை ஆழ்வார் | பாஞ்சசன்னியம் (சங்கு) | பொற்றாமரைக் குளம், திருவெஃகா |
| 2 | பூதத்தாழ்வார் | கௌமோதகம் (கதை) |
திருக்கடல்மல்லை,(மகாபலிபுரம்) |
| 3 | பேயாழ்வார் | நாந்தகம்(வாள்) | ஆதிகேசவபெருமாள்கோயில், மயிலாப்பூர் |
| 4 | திருமழிசை ஆழ்வார் | ஆழி (சக்கரத்தாழ்வார்) | திருமழிசை |
| 5 | நம்மாழ்வார் | சேனை முதலியார் | திருக்குருகூர் |
| 6 | மதுரகவி ஆழ்வார் | நித்யஸூரி குமுதர் | திருக்கோளூர் |
| 7 | பெரியாழ்வார் | கருடாழ்வார் | ஸ்ரீ வில்லிபுத்தூர் |
| 8 | ஆண்டாள் | பூமாதேவி | ஸ்ரீ வில்லிபுத்தூர் |
| 9 | குலசேகர ஆழ்வார் | கௌஸ்துபம் | திருவஞ்சிக்களம் |
| 10 | தொண்டரடிப்பொடி ஆழ்வார் | வைஜயந்தி (வனமாலை) | திருமண்டங்குடி |
| 11 | திருப்பாணாழ்வார் | ஸ்ரீவத்ஸம் | உறையூர் |
| 12 | திருமங்கை ஆழ்வார் | சார்ங்கம் (வில்) | திருக்குறையலூர் (திருவாலி) |
ஆழ்வார்கள் பன்னிருவர் பாடல்

ஆழ்வார்கள் அவதார தினங்கள் அட்டவணை.
| எண் | ஆழ்வார் | மாதம் | நக்ஷத்திரம் |
| 1 | பொய்கை ஆழ்வார் | ஐப்பசி | திருவோணம் |
| 2 | பூதத்தாழ்வார் | ஐப்பசி | அவிட்டம் |
| 3 | பேயாழ்வார் | ஐப்பசி | சதயம் |
| 4 | திருமழிசை ஆழ்வார் | தை | மகம் |
| 5 | நம்மாழ்வார் | வைகாசி | விசாகம் |
| 6 | மதுரகவி ஆழ்வார் | சித்திரை | சித்திரை |
| 7 | பெரியாழ்வார் | ஆனி | சுவாதி |
| 8 | ஆண்டாள் | ஆடி | பூரம் |
| 9 | குலசேகர ஆழ்வார் | மாசி | புணர்பூசம் |
| 10 | தொண்டரடிப்பொடி ஆழ்வார் | மார்கழி | கேட்டை |
| 11 | திருப்பாணாழ்வார் | கார்த்திகை | ரோகிணி |
| 12 | திருமங்கை ஆழ்வார் | கார்த்திகை | கார்த்திகை |

ஆழ்வார்கள் அருளிய நாலாயிரத்தில் உள்ள பல்வேறு பிரபந்தங்களின் பெயர்கள் பற்றிய ஒரு சிறு குறிப்பு.
(நன்றி: திருவேங்கடத்தான் திருமன்றம் ட்ரஸ்ட்)
| Sl Num | வகை/காரணம் | பிரபந்தம் |
| 1 | ஆரம்ப வார்த்தைகளால் பெயர் பெற்றவை |
திருப்பல்லாண்டு அமலனாதிபிரான் கண்ணிநுண் சிறுத்தாம்பு |
| 2 | அந்தாதித் தொடையால் பெயர் பெற்றவை |
முதல் திருவந்தாதி இரண்டாம் திருவந்தாதி மூன்றாம் திருவந்தாதி |
| 3 | ஆரம்ப வார்த்தைகளாலும் அந்தாதித் தொடையாலும் பெயர் பெற்றது | நான்முகன் திருவந்தாதி |
| 4 | பாடியவர்களாற் பெயர் பெற்றவை |
பெரியாழ்வார் திருமொழி நாச்சியார் திருமொழி பெருமாள் திருமொழி |
| 5 | அளவால் பெயர் பெற்றவை |
பெரிய திருமொழி திருவெழுகூற்றிருக்கை |
| 6 | பாவாற் பெயர் பெற்றவை |
திருவாசிரியம் திருச்சந்த விருத்தம் திருக்குறுந்தாண்டகம் திருநெடுந்தாண்டகம் |
| 7 | செயலாற் பெயர் பெற்றவை |
திருப்பாவை திருப்பள்ளியெழுச்சி |
| 8 | தன்மையால் பெயர் பெற்றவை |
திருவிருத்தம் சிறிய திருமடல் பெரிய திருமடல் திருமாலை |
| 9 | சிறப்பால் பெயர் பெற்றது | திருவாய்மொழி |

வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறு எங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்.
[பொருள்]
வேதங்களைத் தமிழ் மொழியில் அளித்த குருகூர் சடகோபரான நம்மாழ்வாரே எங்கள் வாழ்வு என்று இருந்த மதுரகவியாழ்வார் எங்கள் சுவாமி ஆவார்.
நம்மாழ்வாரை அன்றி வேறு ஒன்றையும் அடைக்கலமாகக் கொள்ளாத மதுரகவியாழ்வாரே எங்களுக்கு கதியாவார்.
"வண்குருகூர் ஏறு" - ஆதிநாதப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் பெருமை வாய்ந்த திருக்குருகூர் நம்பி (நம்மாழ்வார்)
"வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்" - இதுவும் நம்மாழ்வாரையே குறிக்கும்.
நம்மாழ்வார் அருளிய பிரபந்தங்கள் நான்கு. அவையாவன:
1) திருவிருத்தம்
2) திருவாசிரியம்
3) திருவாய்மொழி
4) பெரிய திருவந்தாதி
இவை நான்கும் வேதங்களின் சாரமாக வைணவப் பெரியோர்களால் கருதப்படுகின்றன.

"குருகூர் சடகோபன்" என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார், திருக்கோளூர் திவ்ய தேசத்தில், சித்திரை மாதம் சித்திரை நன்னாளில் அவதரித்தார். உயர்ந்த ஞானமும் வைராக்கியமும் திருமால் பக்தியும் பெற்றவராய் இருந்ததோடு அல்லாமல் செவிக்கினிய கவி பாடுவதிலும் திறன் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அந்தக் காரணம் பற்றி "மதுரகவி" என்றும் பெயர் பெற்றார்.
இவர் நம்மாழ்வாரை குருவாக அடைந்தது ஓர் சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கிறது. ஒரு முறை வடநாட்டில் உள்ள திவ்ய தேசங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தார். ஒரு சமயத்தில் அயோத்தியில் தங்கி இராம பிரானையும் பிராட்டியையும் மங்களாசாசனம் செய்து வந்த காலத்தில் ஒரு நாள் இரவு, தன் சொந்த ஊரான திருக்கோளூர் பெருமான் நினைவு பெற்றவராய் தெற்கு நோக்கி தொழுதார். அப்பொழுது வானில் ஒரு அதிசயமான ஒளிக்கற்றையை கண்ணுற்றார். இந்த நிகழ்ச்சி அடுத்த சில நாட்களும் தொடர்ந்து நடைபெற, அந்த அற்புதமான ஜோதி தனக்கு ஏதோ செய்தி தெரிவிப்பதாக உணர்ந்தார். தொடர்ந்து அந்த அதிசயமான ஜோதி தெற்கு நோக்கி பயணம் செய்வதை உணர்ந்து, தெய்வத்தின் செயல் என எண்ணி அதனை பின் தொடர்ந்தார்.
பல நாட்கள் கழித்து திருக்கோளூர் அருகில் உள்ள தென் குருகூர் நகரை அடைந்தார். "இந்த ஊரில் என்ன விசேஷம்?" என்று ஊர் மக்களை வினவ, அவர்கள் "ஆதிநாதர் கோயிலில் புளிய மரம் விசேஷம். நீரே சென்று காணும்" என்று பதில் உரைக்க உடனே கோயிலுக்கு விரைந்து சென்று ஓர் அதிசயத்தைக் கண்டார். புளிய மரத்தின் பொந்தில் இருந்து கொண்டு, சாதாரணமாக உயிர்களுக்கு ஏற்படும் பசி, தாகம் எதுவும் இல்லாமல், எப்பொழுதும் இறையனுபவத்தில் திளைத்திருந்த நம்மாழ்வாரைக் கண்டார். கண்ட மாத்திரத்தில் பிறவிப் பயனை அடைந்தோம் என்று பேருவகை எய்தினார். நம்மாழ்வாருடன் உரையாடல் மேற்கொண்டு, ஆத்ம தத்துவம் குறித்து அதுகாறும் தனக்கு இருந்த அக்ஞானம் நீங்கப் பெற்றவராய், "அடியேனை ஆட்கொண்டு அருள வேண்டும்" என்று நம்மாழ்வாரிடம் சரணம் அடைந்தார்.

நம்மாழ்வாரும் உயர்ந்த சீடன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து, "நாம் பகவானை அனுபவித்தற்குப் போக்குவீடாகச் சொல்லும் பாசுரங்களை நீர் ஓலைப்படுத்தும்" என்று திருவாய் மலர்ந்தருளினார்.மதுரகவியாரும், நம்மாழ்வாரின் அருளிச்செயல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று நான்கு பிரபந்தங்களை ஓலைகளில் எழுதினார். இவை நான்கும் வேத சாரமாக கருதப்படுகின்றன.
"மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்"
என்பது மதுரகவி ஆழ்வார் வாக்கு.
மதுரகவியாருக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் மிகுந்த பற்றுதல் உண்டாயிற்று. நாளடைவில் நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். அப்பாமாலையின் முதற்பா, "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்று தொடங்குவதால் அதற்கு "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்பது பெயராயிற்று.
நம்மாழ்வார் பெயரை உரைக்கும் மாத்திரத்திலே தன் நாவில் அமுதம் ஊறுகின்றது என்றும் ("தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே ..."), "இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் ஏத்த அருளினான்" என்றும் நம்மாழ்வாரின் புகழையே பாடிக் களித்து, மதுரகவியார் தமது ஆசார்யரான நம்மாழ்வாரிடம் ஆழங்கால் பட்டு "மதுரகவி ஆழ்வார்" ஆனார்.
இவருக்கு பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களை இவரது சீடர்கள் அனுசந்தித்து வந்தார்கள். எனினும் நாளடைவில் அவை வழக்கில் இருந்து காணாமல் போயின. பின்னாளில் ஆசார்யர் நாதமுனிகள், குருகூரை அடைந்து இவரது மரபில் வந்த சீடர்களிடம் "கண்ணிநுண் சிறுதாம்பு" பிரபந்தத்தை (பதினோரு பாசுரங்கள்) மட்டும் அறிந்து கொண்டு, அதனை பன்னிரண்டு ஆயிரம் முறை ஓதி நம்மாழ்வார் அருளினைப் பெற்று நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மீட்டார் என்பது வைணவ சம்பிரதாயம்.
ஆழ்வார் திருவடிகளே சரணம் !

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச் சுடர்விளக் கேற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்.
(இரண்டாம் திருவந்தாதி -1)
திருக்கடல்மல்லை (மகாபலிபுரம்) திவ்ய தேசத்தில், ஐப்பசி மாதம், அவிட்ட நட்சத்திரத்தில் திருமாலின் "கௌமோதகி" என்று அழைக்கப்பெறும் கதாயுத அம்சமாக அவதாரம் செய்தார்.
இவர் அருளியுள்ள பிரபந்தம் "இரண்டாம் திருவந்தாதி" என்று அழைக்கப்படுகிறது. அந்தாதி அமைப்பில் 100 பாசுரங்கள் கொண்ட இந்தப் பிரபந்தத்தில், திருவரங்கம், தஞ்சை, திருக்குடந்தை, திருமாலிருஞ்சோலை, திருக்கோட்டியூர், திருத்தண்கால், திருக்கோவலூர், திருக்கச்சி, திருப்பாடகம், திருநீர்மலை, திருக்கடல்மல்லை, திருவேங்கடம், திருப்பாற்கடல் முதலிய திவ்ய தேசங்கள் குறித்து பாடியுள்ளார்.
ஆழ்வார் திருவடிகளே சரணம் !

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காகச் - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.
(முதல் திருவந்தாதி - 1)
பொய்கை ஆழ்வார் சின்ன காஞ்சிபுரத்தில் உள்ள திருவெஃகா திருத்தலத்தில், பொற்றாமரைக் குளத்திலே தாமரைப் பூவில் அவதாரம் செய்தார். ஐப்பசி மாதம் திருவோண நட்சத்திரம். திருமாலின் பாஞ்சசன்னிய அம்சமாகத் தோன்றியவர்.
இவர் அருளியுள்ள பிரபந்தம் "முதல் திருவந்தாதி" என்று அழைக்கப்படுகிறது. அந்தாதி அமைப்பில் 100 பாசுரங்கள் கொண்ட இந்த பிரபந்தத்தில், திருவரங்கம், திருவிண்ணகர், திருக்கோவலூர், திருவெஃகா, திருவேங்கடம், திருப்பாற்கடல், பரமபதம் முதலிய திவ்ய தேசங்கள் குறித்து பாடியுள்ளார்.
ஆழ்வார் திருவடிகளே சரணம் !

பச்சை மாமலை போல் மேனி பவளவாய்க் கமலச் செங்கண்
அச்சுதா அமரர் ஏறே ! ஆயர்தம் கொழுந்தே ! என்னும்
இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே !
(திருமாலை - 1)
ஆழ்வார்களிலே ஸ்ரீரங்கம் ரங்கநாதரை மட்டுமே பாடிய ஆழ்வார் என்ற பெருமை பெற்றவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார் ஆவார். இயற்பெயர் "விப்ர நாராயணன்". சோழ நாட்டில் மண்டங்குடி என்ற ஊரில், மார்கழி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் 'திருமால் வனமாலை'யின் அம்சமாக அவதரித்தார். திருவரங்கத்தில் நந்தவனம் அமைத்து அரங்கனுக்கு மாலை தொடுத்து சமர்ப்பித்து வந்தார். குறிப்பாக துளசி மாலை தொடுத்து அரங்கனுக்கு சமர்ப்பிப்பதில் இவருக்கு மிகுந்த ஈடுபாடு இருந்தது.
இவ்வாறு துளசி மற்றும் புஷ்ப கைங்கர்யத்தில் ஈடுபட்டு இருந்த இவரை, அரங்கன் மாயம் செய்து சில நாட்கள் தேவதேவி என்ற ஒரு பெண்ணிடம் மயங்கச் செய்தான். அரங்கனை முற்றிலும் மறந்து தன் பொருளை அந்தப் பெண்ணிடம் இழந்தார். முடிவில் பொருள் ஒன்றும் இல்லாத நிலையில் அந்தப் பெண் ஆழ்வாரைக் கை விட்டாள். ஆனால் ஆழ்வார் தேவதேவியை மறக்க இயலாமல் வருந்தவே அரங்கன் ஒரு திருவிளையாடல் செய்தான்.
உயர்ந்த முனிவர்கள் போற்றும் பரந்தாமன், ஒரு சிறுவனாக உருமாறி, தன் சந்நிதியில் இருந்த பொன் வட்டிலை ஏந்திக் கொண்டு தேவதேவியின் வீட்டிற்கு சென்று விப்ர நாராயணர் அளித்ததாகக் கொடுத்தான். அந்தப் பெண்ணும் மிகவும் மகிழ்ந்து மறுபடி ஆழ்வாரை தன் வீட்டிற்கு உள்ளே வர அனுமதி அளித்தாள். மறுநாள் காலை, கோயிலில் அரங்கன் சந்நிதியில் பொன் வட்டிலைக் காணாமல், பட்டர் குழாம் அரசனிடம் முறையிட, அரசன் ஆட்களை ஏவி வட்டில் இருக்குமிடம் அறிந்து, ஆழ்வார் அதைத் திருடியதாக நினைத்து அவரை சிறையில் அடைத்தான்.
அன்றிரவு அரசனின் கனவில் அரங்கன் தோன்றி அனைத்தும் தன் திருவிளையாடல் என்பதை உணர்த்தி, ஆழ்வாரை உடனே விடுவிக்க கட்டளை இட்டான். அரசனும் அவ்வாறே செய்ய, ஆழ்வார் அரங்கனின் அருளை நினைந்து நெக்குருகி இனி தன் வாழ்நாள் எல்லாம் அரங்கனுக்கே ஆட்பட்டு இருக்க வேண்டும் என்று உறுதி கொண்டு பழையபடி துளவத்தொண்டில் ஈடுபட்டார்.
இடையில் சிறிது காலம் அரங்கனை மறந்ததை பெரியக் குற்றமாக கருதிய ஆழ்வார், அதற்கு பரிகாரமாக அரங்கனின் தொண்டர்களின் திருவடித் தீர்த்தத்தை பருகினார் என்றும் அதன் காரணமாகவே "தொண்டரடிப்பொடி ஆழ்வார்" என்று பெயர் ஏற்பட்டதாகவும் வைணவப் பெரியோர் சொல்வர்.

அரங்கனிடம் கொண்ட பக்தியின் தீவிரத்தில் "திருமாலை" என்னும் பிரபந்தத்தை அருளினார். திருமால் ராமனாக அவதாரம் செய்த பொழுது, விசுவாமித்திரர் யாகம் காக்க அவருடன் காட்டிற்கு செல்கிறார். ராம லக்ஷ்மணர்கள், விசுவாமித்திர ரிஷியுடன் இரவு பொழுதைக் காட்டில் கழிக்கின்றனர். விடியல் வேளையில், "கௌசல்யா சுப்ரஜா ராமா...உத்திஷ்ட" என்று விசுவாமித்திரர் ராமனை துயில் எழுப்புகிறார். இது போல அர்ச்சாவதாரத்தில் அரங்கனைத் துயில் எழுப்பும் விதமாக, "திருப்பள்ளி எழுச்சி" என்னும் பிரபந்தத்தையும் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அருளியிருக்கிறார்.
ஆழ்வார் திருவடிகளே சரணம் !

பல்லாண்டு பல்லாண்டு
பல்லாயிரத்தாண்டு* பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா!*
உன் சேவடி செவ்வித்திருக்காப்பு
(திருப்பல்லாண்டு - 1)
பெருமாளுக்கு "பல்லாண்டு" பாடிய ஆழ்வார் இவர். ஸ்ரீ வில்லிபுத்தூர் திவ்ய தேசத்தில், ஆனி மாதம், சுவாதி நட்சத்திரத்தில் அவதாரம். ஸ்ரீ வடபத்ரசாயி கோயிலில் பட்டராக பெருமாளுக்கு தொண்டு செய்து வந்தார். கோயில் நந்தவனத்தில் இருந்து பூக்களை பறித்து மாலையாக செய்து பெருமாளுக்கு அணிவித்து மகிழ்ந்தார். பெருமாளிடம் தன் சித்தத்தை எப்பொழுதும் வைத்திருந்த காரணம் பற்றி "விஷ்ணு சித்தர்" என்று அழைக்கப்பட்டார்.
இவர் அருளிய பாசுரங்கள் "பெரியாழ்வார் திருமொழி" என்று தொகுக்கப் பெற்றுள்ளன. மொத்தம் 473 பாசுரங்கள். இவற்றுள் நிறைய பாசுரங்கள் யசோதை பாவனையில் கிருஷ்ணாவதாரத்தில் நடந்த நிகழ்வுகளைப் பாடும் வகையில் அமைந்துள்ளன. கண்ணனின் அவதாரம், பாதாதி கேச வர்ணனை, கோகுலத்தில், பிருந்தாவனத்தில், துவாரகாவில், ஹஸ்தினாபுரத்தில், பாரதப் போரில், என்று அடியார்கள் மனம் கவரும் கிருஷ்ணாவதார லீலைகள் அனைத்தையும் பாசுரங்களில் ஈரத் தமிழில் அருளியிருக்கிறார்.
கண்ணனை தம் உள்ளத்தில் குடி கொண்டிருக்கக் கண்ட மகான். பெரியாழ்வார் பாசுரங்கள் நம்மையும் அவன் அருகில் அழைத்துச் செல்லும் என்பதை கீழ்காணும் பெரியாழ்வார் திருமொழியின் இறுதி பாசுரத்தால் அறியலாம்.
"வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில்வண்ணனை
ஆயரேற்றை அமரர் கோவை அந்தணர் தம் அமுதத்தினை
சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே."
ஆழ்வார் திருவடிகளே சரணம் !
