
ஸ்ரீ சடகோபன் திருநாராயண ஸ்வாமி திவ்ய பிரபந்த பாடசாலை செய்தி பத்திரிகை, ஃபிப்ரவரி 2012
(பாடசாலை குறித்த செய்திகள், சமீபத்திய நிகழ்வுகள், தியாக பாரதி இதழ், பாப்பா பாட்டு, கோசாலை செய்திகள் முதலியன. )
நும்மைத் தொழுதோம்
அருளியவர் : திருமங்கை ஆழ்வார்
பாசுர எண் : 1328
திவ்ய தேசம் : திரு இந்தளூர்
பெரிய திருமொழி : 4-9-1

நும்மைத்தொழுதோம் நுந்தம் பணிசெய்திருக்கும் நும்மடியோம்
இம்மைக்கின்பம் பெற்றோமெந்தா யிந்தளூரீரே !
எம்மைக்கடிதாக் கருமமருளி யாவாவென்றிரங்கி
நம்மையொருகால் காட்டி நடந்தால் நாங்களுய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)
நும்மைத் தொழுதோம் நும் தம் பணி செய்து இருக்கும் நும் அடியோம்
இம்மைக்கு இன்பம் பெற்றோம் எந்தாய் ! இந்தளூரீரே !
எம்மைக் கடிதாக் கருமம் அருளி "ஆவா!" என்று இரங்கி
நம்மை ஒருகால் காட்டி நடந்தால் நாங்கள் உய்யோமே ?
(பெரிய திருமொழி - 4.9.1)
இந்தளூரில் கோயில் கொண்டிருக்கும் எங்கள் தாயே ! எங்களை ஆளும் சுவாமியாக உம்மைப் பெற்று, உமது அடியார்களாக, உமக்கான காரியங்களை மட்டும் செய்து கொண்டிருக்கிறோம். உம்மை இரு கரம் கூப்பி தொழுதோம் ! "ஆ ! ஆ ! நம்மையே கதியாகக் கொண்டிருக்கும் இவர்களுக்கு ஒரு கைங்கர்யம் அருள்வோம் ! " என்று விரைந்து எங்களுக்கு இரங்கி, ஏதேனும் ஒரு சேவையை ஏற்படுத்தி, உள்ளே அனுமதித்து ஒரே ஒரு முறை காட்சி அளித்தால், உம்மையே உயிராகக் கொண்டுள்ள நாங்கள் பிழைத்துப் போக மாட்டோமா ? இம்மைக்கு இன்பம் பெற்றோம் ஆவோமே.
கடிதா - விரைவாக
கருமம் - காரியம்; கைங்கர்யம்; (பகவத்/பாகவத சேவை)
ஆவா - ஆ ! + ஆ!
ஒருகால் - ஒரு முறை
