வேறொன்றும் நானறியேன் வேதம் தமிழ் செய்த
மாறன் சடகோபன் வண்குருகூர் - ஏறு எங்கள்
வாழ்வாம் என்றேத்தும் மதுரகவியார் எம்மை
ஆள்வார் அவரே அரண்.

[பொருள்]
வேதங்களைத் தமிழ் மொழியில் அளித்த குருகூர் சடகோபரான நம்மாழ்வாரே எங்கள் வாழ்வு என்று இருந்த மதுரகவியாழ்வார் எங்கள் சுவாமி ஆவார்.
நம்மாழ்வாரை அன்றி வேறு ஒன்றையும் அடைக்கலமாகக் கொள்ளாத மதுரகவியாழ்வாரே எங்களுக்கு கதியாவார்.

"வண்குருகூர் ஏறு" - ஆதிநாதப் பெருமாள் எழுந்தருளியிருக்கும் பெருமை வாய்ந்த திருக்குருகூர் நம்பி (நம்மாழ்வார்)
"வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபன்" - இதுவும் நம்மாழ்வாரையே குறிக்கும்.
நம்மாழ்வார் அருளிய பிரபந்தங்கள் நான்கு. அவையாவன:
1) திருவிருத்தம்
2) திருவாசிரியம்
3) திருவாய்மொழி
4) பெரிய திருவந்தாதி

இவை நான்கும் வேதங்களின் சாரமாக வைணவப் பெரியோர்களால் கருதப்படுகின்றன.

"குருகூர் சடகோபன்" என்று போற்றப்படும் நம்மாழ்வாரின் சீடரான மதுரகவி ஆழ்வார், திருக்கோளூர் திவ்ய தேசத்தில், சித்திரை மாதம் சித்திரை நன்னாளில் அவதரித்தார்.  உயர்ந்த ஞானமும் வைராக்கியமும் திருமால் பக்தியும் பெற்றவராய் இருந்ததோடு அல்லாமல் செவிக்கினிய கவி பாடுவதிலும் திறன் வாய்ந்தவராகத் திகழ்ந்தார். அந்தக் காரணம் பற்றி "மதுரகவி" என்றும் பெயர் பெற்றார்.

இவர் நம்மாழ்வாரை குருவாக அடைந்தது ஓர் சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கிறது. ஒரு முறை வடநாட்டில் உள்ள திவ்ய தேசங்களுக்கு யாத்திரை மேற்கொண்டு பல கோயில்களுக்கு சென்று தரிசனம் செய்து வந்தார். ஒரு சமயத்தில் அயோத்தியில் தங்கி இராம பிரானையும் பிராட்டியையும் மங்களாசாசனம் செய்து வந்த காலத்தில் ஒரு நாள் இரவு, தன் சொந்த ஊரான திருக்கோளூர் பெருமான் நினைவு பெற்றவராய் தெற்கு நோக்கி தொழுதார். அப்பொழுது வானில் ஒரு அதிசயமான ஒளிக்கற்றையை கண்ணுற்றார். இந்த நிகழ்ச்சி அடுத்த சில நாட்களும் தொடர்ந்து நடைபெற, அந்த அற்புதமான ஜோதி தனக்கு ஏதோ செய்தி தெரிவிப்பதாக உணர்ந்தார். தொடர்ந்து அந்த அதிசயமான ஜோதி தெற்கு நோக்கி பயணம் செய்வதை உணர்ந்து, தெய்வத்தின் செயல் என எண்ணி அதனை பின் தொடர்ந்தார்.

பல நாட்கள் கழித்து திருக்கோளூர் அருகில் உள்ள தென் குருகூர் நகரை அடைந்தார்.  "இந்த ஊரில் என்ன  விசேஷம்?" என்று ஊர் மக்களை வினவ,  அவர்கள் "ஆதிநாதர் கோயிலில் புளிய மரம் விசேஷம். நீரே சென்று காணும்" என்று பதில் உரைக்க உடனே கோயிலுக்கு விரைந்து  சென்று ஓர் அதிசயத்தைக் கண்டார். புளிய மரத்தின் பொந்தில் இருந்து கொண்டு, சாதாரணமாக உயிர்களுக்கு ஏற்படும் பசி, தாகம் எதுவும் இல்லாமல்,  எப்பொழுதும்  இறையனுபவத்தில் திளைத்திருந்த நம்மாழ்வாரைக் கண்டார். கண்ட மாத்திரத்தில் பிறவிப் பயனை அடைந்தோம் என்று பேருவகை எய்தினார். நம்மாழ்வாருடன் உரையாடல் மேற்கொண்டு, ஆத்ம தத்துவம் குறித்து அதுகாறும் தனக்கு இருந்த அக்ஞானம் நீங்கப் பெற்றவராய், "அடியேனை ஆட்கொண்டு அருள வேண்டும்" என்று நம்மாழ்வாரிடம் சரணம் அடைந்தார்.

நம்மாழ்வாரும் உயர்ந்த சீடன் கிடைத்ததில் மிகவும் மகிழ்ந்து, "நாம் பகவானை அனுபவித்தற்குப் போக்குவீடாகச் சொல்லும் பாசுரங்களை நீர் ஓலைப்படுத்தும்" என்று  திருவாய் மலர்ந்தருளினார்.மதுரகவியாரும், நம்மாழ்வாரின் அருளிச்செயல்களான திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்று நான்கு பிரபந்தங்களை  ஓலைகளில் எழுதினார். இவை நான்கும் வேத சாரமாக கருதப்படுகின்றன.

"மிக்க வேதியர் வேதத்தின் உட்பொருள்
நிற்கப் பாடி என் நெஞ்சுள் நிறுத்தினான்"
என்பது மதுரகவி ஆழ்வார் வாக்கு.

மதுரகவியாருக்கு நம்மாழ்வார் பாசுரங்களில் மிகுந்த பற்றுதல் உண்டாயிற்று. நாளடைவில்  நம்மாழ்வார் தமக்கு செய்த மாபெரும் அனுக்ரஹத்தை நினைந்து உருகி அவரைக் குறித்து பதினோரு பாசுரங்களால் ஆன ஒரு பாமாலை இயற்றினார். அப்பாமாலையின் முதற்பா, "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்று தொடங்குவதால் அதற்கு  "கண்ணிநுண் சிறுத்தாம்பு" என்பது பெயராயிற்று.

நம்மாழ்வார் பெயரை உரைக்கும் மாத்திரத்திலே தன் நாவில் அமுதம் ஊறுகின்றது என்றும் ("தென் குருகூர் நம்பி என்றக்கால் அண்ணிக்கும் அமுதூறும் என் நாவுக்கே ..."), "இன்று தொட்டு எழுமையும் தன் புகழ் ஏத்த அருளினான்" என்றும் நம்மாழ்வாரின் புகழையே பாடிக் களித்து, மதுரகவியார் தமது ஆசார்யரான நம்மாழ்வாரிடம் ஆழங்கால் பட்டு  "மதுரகவி ஆழ்வார்" ஆனார்.

இவருக்கு பிறகு நம்மாழ்வாரின் பாசுரங்களை இவரது சீடர்கள் அனுசந்தித்து வந்தார்கள்.  எனினும் நாளடைவில் அவை வழக்கில் இருந்து காணாமல் போயின. பின்னாளில் ஆசார்யர் நாதமுனிகள், குருகூரை அடைந்து இவரது மரபில் வந்த  சீடர்களிடம் "கண்ணிநுண் சிறுதாம்பு" பிரபந்தத்தை (பதினோரு பாசுரங்கள்) மட்டும் அறிந்து கொண்டு, அதனை பன்னிரண்டு ஆயிரம் முறை ஓதி நம்மாழ்வார் அருளினைப் பெற்று நாலாயிர திவ்ய பிரபந்தத்தை மீட்டார்  என்பது வைணவ சம்பிரதாயம்.

ஆழ்வார் திருவடிகளே சரணம் !

வண்ண மால்வரையே குடையாக
மாரி காத்தவனே ! மதுசூதா ! *
கண்ணனே ! கரி கோள் விடுத்தானே !
காரணா ! களிறட்ட பிரானே !
எண்ணுவார் இடரைக் களைவானே !
ஏத்த அரும் பெரும் கீர்த்தியினானே !
நண்ணி நான் உன்னை நாடொறும் ஏத்தும்
நன்மையே அருள் செய் எம்பிரானே !

(பெரியாழ்வார் திருமொழி - 5-1-8)

english பதம் பிரித்துக் காண்பி
english பாசுரம்
பாசுரம்
[பொருள்]: 

பல வித வளங்கள் நிறைந்த பெருமை பொருந்திய கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, இந்திரன் பெய்வித்த மழையில் இருந்து ஆயர்ப்பாடி மக்கள், பசுக்கள், கன்றுகள், இன்ன பிற உயிர்களையும் காத்த கண்ணனே ! மது என்னும் அரக்கனை அழித்தவனே ! முதலையிடம் சிக்கி துன்பப்பட்ட கஜேந்திரன் என்னும் யானையின் துயரைத் தீர்த்தவனே ! (மூலக் காரணம்) ஆதிமூலம்  ஆனவனே ! தர்மத்திற்கு விரோதமான காரியங்களைச் செய்து வந்த கம்சன் வளர்த்த குவலயாபீடம் என்னும் யானையைக் கொன்றவனே ! உன்னை நினைக்கும் அடியார்கள் துன்பத்தைக் களைபவனே ! 'இவ்வளவு தான்!' என்று சொல்லி முடிக்க முடியாத எல்லையில்லாத புகழ் மிக்கவனே ! என் தலைவனே ! உன்னை நாள் தோறும் அணுகி உன் புகழ் போற்றும் நன்மையே அருள் செய்ய வேண்டுகிறேன்.

(சொற்பொருள்): 

வரை - மலை (இங்கு கோவர்த்தனம்)
மால் - பெருமை; பழமை; வளமை
மாரி - மழை
கரி - யானை (இங்கு கஜேந்திரன்)
கோள் - துன்பம்
களிறு - யானை (இங்கு குவலயாபீடம்)
அடுதல் - தொலைத்தல்; அழித்தல்
ஏத்துதல் - போற்றுதல்; புகழ்தல்; வாழ்த்துதல்
நண்ணுதல் - அணுகுதல்