பெற்றம் பிணை மருதம் பேய்முலை மாச்சகடம்
முற்றக் காத்து ஊடு போய் உண்டு உதைத்து - கற்றுக்
குணிலை விளங்கனிக்குக் கொண்டு எறிந்தான் வெற்றிப்
பணிலம் வாய் வைத்து உகந்தான் பண்டு.
(மூன்றாம் திருவந்தாதி - 60)

english பதம் பிரித்துக் காண்பி
english பாசுரம்
பாசுரம்
[பொருள்]: 

திருமால், முன்னொரு காலம் (துவாபர யுகத்தில்) கிருஷ்ணனாக அவதாரம் செய்த பொழுது, கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து, மாடு கன்றுகளை பெருமழையினின்று காத்தான்; உரலை இழுத்துக் கொண்டு தவழ்ந்து சென்று இரட்டை மருத மரங்களைச் சாய்த்தான்; தாயுருவாகி வந்த பூதனை என்னும் பேயின் உயிர் உண்டான்; சகடாசுரனைத் திருப்பாதங்களால் உதைத்தான்; விளங்கனிக்கு வத்சாசுரனை எறிந்தான்; பாரத யுத்தத்தில் தன் பாஞ்சசன்னியம் என்னும் சங்கினை ஊதி மகிழ்ந்தான்.

(சொற்பொருள்): 

பண்டு - முன்னொரு காலம்
பிணை மருதம் - இரட்டை மருத மரங்கள்
பெற்றம் - பசுமாடு
சகடம் - சக்கரம்
கற்று - கன்று (கற்று என மருவியது)
குணில் - குறுந்தடி
பணிலம் - சங்கு

[கூடுதல் விளக்கம்]: 

இப்பாசுரம் கண்ணனின் பல்வேறு கோகுல, பிருந்தாவன லீலைகளை அடுக்கிச் சொல்கிறது. "பெற்றம் முற்றக் காத்து", "பிணை மருதம் ஊடு போய்", "பேய்முலை உண்டு", "மாச்சகடம் உதைத்து" என்று கூட்டிப் படித்து லீலைகளை அனுபவிக்கலாம்.

(பெற்றம் முற்றக் காத்து) - இந்திரன், கண்ணபிரான் பெருமை அறியாதவனாய், அகங்காரத்தினால் கனமழை பெய்வித்து பிருந்தாவன உயிரினங்கள் அனைத்தையும் வருத்திய பொழுது, ஒர் அற்புதச் செயலாக கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்து ஆநிரைகள் துயர் நீக்கி அருளிய லீலையை ஆழ்வார் அனுபவிக்கிறார்.

(பிணை மருதம் ஊடு போய்) -  முன்னொரு சமயம் குபேரனுடைய புத்திரர்கள் - நளகூபரன் மற்றும் மணிக்ரீவன் - இருவரும் கர்வத்தினால் நாரத மஹரிஷியை அவமதித்துவிட, அவரால் மருத மரங்களாக மாறும்படி சபிக்கப் பெற்றார்கள். எல்லா உயிர்களிடத்தும் கருணை உள்ளம் கொண்ட நாரதர் சாபம் நீங்கும் வழிமுறையையும் உரைத்தார். துவாபர யுகத்தில் கிருஷ்ணாவதாரத்தில் பகவானால் இவர்கள் சாபம் நீங்கும் என்றும் ஆசி நல்கினார்.  அவ்வாறே அவதார காலத்தில் கண்ணன் அவர்களுக்கு சாப விமோசனம் அளித்த லீலையை ஆழ்வார் அனுபவிக்கிறார். குழந்தை கிருஷ்ணன் சேட்டைகள் பல செய்து வந்ததால் யசோதையால் உரலில் கட்டப்பட்டான். தாயிடம் பயந்தது போல அழுத கிருஷ்ணன், யசோதை அவனை விட்டு அகன்று வேறு வேலைகளை கவனிக்கச் சென்ற பொழுது, தான் கட்டப்பட்ட உரலை இழுத்துக் கொண்டு வீட்டின் வெளியே தவழ்ந்து சென்றான். உரலை இழுத்தபடியே கோகுலத்தில் மருத மரங்களாக நின்ற குபேர புத்திரர்களிடையே சென்று, தன் பராக்கிரமத்தால் மரங்கள் வேருடன் அற்று வீழும்படி உரலை இழுத்து குபேர புத்திரர்களுக்கு சாப விமோசனம் அளித்து, தன்னிடம் மாறாத பக்தியையும் அளித்தான்.

(பேய்முலை உண்டு) - இது கம்சனால் ஏவப்பட்ட பூதனை என்னும் அரக்கி கண்ணபிரான் அருள் பெற்ற நிகழ்ச்சியைக் குறிக்கும். கண்ணனுக்கு தாய்ப்பால் கொடுக்கும் புறக்காரணத்துடன், ஆனால் அவனுக்கு நச்சுப்பால் கொடுத்து கொல்லும் வஞ்ச எண்ணத்துடன் அணுகினாள். பகவான் பாலுடன் உயிரையும் உறிஞ்சி அவளுக்கு முக்தி அளித்த நிகழ்ச்சியைக் குறிக்கிறது.
ஏதேனும் ஒரு காரணம் பற்றி அந்தப் பேரருளாளனை அணுகினால் போதும், அவன் அருளுக்கு பாத்திரமாவோம் என்னும்படியான நிகழ்ச்சி இது என்பதால் ஆழ்வார்கள் தங்கள் பாசுரங்களில் இந்த நிகழ்ச்சியை பல முறை பாடுகிறார்கள். "பேய்ப்பால் முலையுண்ட பித்தன்" என்பது பெரியாழ்வார் திருமொழி(2.3.1).

(மாச்சகடம் உதைத்து) -  கோகுலத்தில் கிருஷ்ண ஜென்ம நக்ஷத்திரத்தை முன்னிட்டு கோப கோபியர் அனைவரும் கூடி விழா கொண்டாடினர். அவ்விழாவில் பால், தயிர், வெண்ணைய் முதலிய பல்வேறு பதார்த்தங்களை ஏற்றிச் செல்ல ஏற்பாடாகியிருந்த ஒரு மாட்டு வண்டியில் பிரவேசித்து குழந்தையைக் கொல்ல திட்டமிட்டிருந்த சகடாசுரன் என்பவன், பகவான் திருவடிகளால் உதைக்கப்பெற்று நற்கதி அடைந்த நிகழ்ச்சியை ஆழ்வார் அனுபவிக்கிறார். குழந்தை, கை கால்களை அசைப்பது போல கிருஷ்ணன் கால்களை அசைத்து வண்டிச் சக்கரத்தை தன் திருவடிகளால் உதைத்து அந்த வண்டியே நொறுங்கி விழும்படிச்செய்து அந்த அசுரனை மாய்த்தான் என்பது ஸ்ரீ பாகவத புராண நிகழ்ச்சி.

(கற்றுக் குணிலை விளங்கனிக்கு எறிந்து) - இது வத்ஸாசுரன் என்னும் அசுரனைக் கண்ணன் கொன்ற நிகழ்ச்சி. கிருஷ்ணனும் பலராமனும் கன்றுகள் மேய்த்து வரும் சிறுவர்களாகத் திகழ்ந்த காலத்தில், கவிண்(எறிதடி) எறிந்து விளாம்பழங்கள் உதிரச் செய்து ஆயர் நண்பர்களுடன் பழங்களைப் பகிர்ந்து உண்பது வழக்கம். கம்சனால் ஏவப்பட்ட வத்ஸாசுரன், கன்று வேடம் பூண்டு கன்றுகளுடன் கன்றாகக் கலந்து கிருஷ்ணணைக் கொல்ல தக்க சமயம் பார்த்திருந்தான். ஸ்ரீ கிருஷ்ண பகவான் புல் மேயாமல் இருந்த அந்த கன்றினை அசுரன் என்று அடையாளம் கண்டு, வாலைப் பிடித்து சுழற்றி கவிண் போல விளாமரத்தின் மீது எறிந்தார். அந்த அசுரன் தனது உண்மையான பெருத்த சரீரத்துடன் வீழ்த்தப்பட்ட விளாம்பழங்களுடன் தானும் வீழ்ந்தவனானான்.

(வெற்றிப் பணிலம் வாய் வைத்து உகந்தான்) - இது மகாபாரத யுத்தத்தில் தர்மத்தை நிலைநாட்ட பாண்டவர்க்கு ஜெயம் ஏற்படும்படி தனது பாஞ்சஜன்யத்தை மகிழ்ந்து ஊதிய செயல். சங்கநாதத்தின் பேரொலியே கௌரவ சேனையின் தைர்யத்தை அழித்தது. "தர்மஸ்ய ப்ரபு அச்யுத:" என்றபடி தர்மத்தின் தலைவனாக, காவலனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் திகழ்கிறார். எங்கே ஸ்ரீ கிருஷ்ணன் இருக்கிறாரோ அங்கே அவரது குணமான வெற்றியும் இருக்கிறது.

(ஒப்புநோக்கு): 

"பொன்றச் சகடம் உதைத்தாய் ! புகழ் போற்றி !
கன்று குணிலா எறிந்தாய் ! கழல் போற்றி !
குன்று குடையாய் எடுத்தாய் ! குணம் போற்றி"
என்ற ஆண்டாள் திருப்பாவை பாசுரம் இங்கு ஒப்புநோக்க நல்கும்.

குன்றனைய குற்றம் செயினும் குணங்கொள்ளும்
இன்று முதலாக என்னெஞ்சே - என்றும்
புறனுரையே ஆயினும் பொன்னாழிக் கையான்
திறனுரையே சிந்தித்து இரு.
(முதல் திருவந்தாதி - 41)

english பதம் பிரித்துக் காண்பி
english பாசுரம்
பாசுரம்
[பொருள்]: 

என்னுடைய நெஞ்சமே ! திருமால், தம்மை சரணம் என்று அடைந்தவர்கள் குன்றம் அளவு பெரிய குற்றங்கள் செய்திருந்தாலும், அதனை எல்லாம் கருத்தில் கொள்ளாது, அவர்கள் செய்த நல்ல காரியங்களை மட்டுமே கருத்தில் கொள்வான். ஆதலால்,  உள்ளம் அன்பு கலந்து சொல்ல முடியாவிடினும், வெறும் புற அளவில் வாய் வார்த்தையாக பேசிடினும், இன்று முதல், பொன் ஒளி வீசும் சுதர்சன சக்கரத்தைக் கையில் ஏந்திய திருமால் பெருமைகளையே பேசுவாயாக. என்றும் அவன் பெருமைகளையே, அவன் அடியார்களுக்கு அருள் செய்த லீலைகளையே சிந்தித்து இருப்பாயாக.

(சொற்பொருள்): 

ஆழி - சுதர்சன சக்கரம்
புறனுரை - உள்ளத்திலிருந்து  வராமல் வெறும் உதட்டளவில் பேசும் பேச்சு
திறனுரை - (பொன்னாழிக் கையான்) திறமைகளைப் பற்றிய பேச்சு

தமர் உள்ளம் தஞ்சை தலையரங்கம் தண்கால்*
தமர் உள்ளும் தண்பொருப்புவேலை* - தமர் உள்ளும்
மாமல்லை கோவல் மதிட்குடந்தை என்பரே*
ஏவல்ல எந்தைக்கு இடம்.
(இரண்டாம் திருவந்தாதி - 70)

english பதம் பிரித்துக் காண்பி
english பாசுரம்
பாசுரம்
[பொருள்]: 

அடியார்கள் உள்ளம், தஞ்சை மாமணிக்கோயில், திவ்ய தேசங்களுள் முதன்மையான திருவரங்கம், திருதண்கால், அடியார்கள் நினைந்து மகிழும்  குளிர்ச்சி பொருந்திய திருவேங்கட மலை மற்றும் திருப்பாற்கடல், திருக்கடல்மல்லை, திருக்கோவலூர், மதில்களோடு கூடிய திருக்குடந்தை - இவை யாவும் தன் அம்புகளால் எதிரிகளை (பக்தி செய்ய இடையூறாக இருக்கும் விரோதிகளை) ஒழிக்க வல்ல என் தந்தை, சுந்தரவில்லி இராமன் உறைகன்ற இடங்களாகும்.

(சொற்பொருள்): 

தமர் - அடியவர்
தண் - தண்மை (குளிர்ச்சி)
பொருப்பு - மலை (வேங்கடம்)
வேலை - திருப்பாற்கடல்
உள்ளும் - உகந்து நினைக்கும்
- அம்பு
ஏ வல்ல - அம்புகள் எய்வதில் வல்ல

தீமழை காத்தவன்

அருளியவர் : நம்மாழ்வார்

பாசுர எண் : 2871

திவ்ய தேசம் : பொது

திருவாய்மொழி : 1-8-4

வெற்பை ஒன்று எடுத்து ஒற்கம் இன்றியே
நிற்கும் அம்மான் சீர் கற்பன் வைகலே.
(திருவாய்மொழி - 1-8-4)

english பதம் பிரித்துக் காண்பி
english பாசுரம்
பாசுரம்
[பொருள்]: 

கோவர்த்தன மலையை, ஒரு வித சிரமும் இன்றி, ஒரு குடையாகப் பிடித்து, ஆயர்களையும் ஆநிரைகளையும் மற்ற உயிரனங்களையும் அன்று பெருமழையில் இருந்து காப்பாற்றிய கிரிதாரியின் பெருமையை நாளும் கற்பேன்.

(சொற்பொருள்): 

வெற்பை - மலை
ஒற்கம் - தளர்ச்சி; சோர்வு
அம்மான் - இறைவன்; தலைவன்; சுவாமி
வைகல் - விடியற்காலம்; (வைகலே - தினமும்)